சுவடியியல் புலம்



      ஓலைச்சுவடியில் நூல்களை எழுதி வைக்கும் வழக்கமானது 19ஆம் நூற்றாண்டு வரை நீடித்தது. அச்சு இயந்திரங்கள் அறிமுகத்தால் ஓலைச்சுவடியில் இருந்த நூல்களெல்லாம் அச்சில் ஏற்றப்பட்டன. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பட்டியலிட்டுள்ள 41 செவ்வியல் நூல்களின் ஓலைச்சுவடிகள் இன்றைக்கும் உலகெங்கும் காணக்கிடைக்கின்றன. அவற்றுள் பல சுவடிகளிலிருந்து அச்சாக்கம் பெற்றுள்ளன. இன்னும் அச்சேறாமலும் பற்பல உள்ளன.

சென்ற நூற்றாண்டுவரை ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, உ.வே. சாமிநாதையர், ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் சுவடிகளை நூல்களாகப் பதிப்பிக்கும் பணியைச் செவ்வனே செய்தனர். பல்வேறு காலக்கட்டங்களில் பலதரப்பட்ட பதிப்பாசிரியர்களால் வெளிவந்த நூல்களில் சுவடிகளிலிருந்த சிற்சில பிழைப் பாடங்களும் இடம்பெற்றன. இவற்றினைக் கருத்தில் கொண்ட செம்மொழி நிறுவனம் சுவடியியல் புலத்தினை (Faculty of Manuscriptology) அமைத்துச் செம்பதிப்புகளை உருவாக்கத் தொடங்கியது. அதற்காகச் சுவடியியல் புலம் ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து வரும் நூலகங்களுக்குச் சென்று சுவடிகளைப் படமெடுத்துக் குறுந்தகடுகளில் (CD/DVD) மின்படியாக்கம் செய்துள்ளது. அக்குறுந்தகடுகளில் இருக்கும் சுவடி நூல்களை ஆய்வாளர்கள் பயன்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் ஓர் உயர் தரத்திலான மின்னணு நூலகம் (Digital Library) உருவாக்கியுள்ளது. இந்த மின்னணு நூலகம் வழியாக ஒரு நூலுக்குரிய பல சுவடிகளைத் தேடவும் (Search) அச்சுவடிகளிலுள்ள பாடவேறுபாடுகளைக் (Textual variations) கண்டறியவும் முடியும்.

இதுவரை செவ்வியல் தொடர்பாகப் பதிபிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் அந்நூலிற்குக் கிடைக்கக்கூடிய அனைத்துச் சுவடிகளையும் பதிப்புகளையும் கொண்டு ஆய்ந்து பதிப்பிக்கப்படவில்லை. இக்குறைபாட்டை நீக்குவதற்கு உலகெங்கிலுமிருந்து கிடைக்கப் பெற்ற எல்லாச் சுவடிகள், பதிப்புகளை ஆய்ந்து, பாடங்களை உறுதிசெய்து செம்பதிப்பாகக் கொண்டு வருவதைச் சுவடியியல் புலத்தின் தலையாய பணியாகக் கொண்டுள்ளது.

அவ்வகையில் நிறுவனத்தின் சுவடியியல் புலத்திலிருந்து வெளிவந்துள்ள செம்பதிப்புகள்:
1. இறையனார் களவியல் (2013)
2. ஐங்குறுநூறு – மருதம் (2017)
3. ஐங்குறுநூறு – நெய்தல் (2017)
4. ஐங்குறுநூறு – குறிஞ்சி (2021)
5. ஐங்குறுநூறு – பாலை (2021)
6. ஐங்குறுநூறு – முல்லை (அச்சில்)

இதைப் போன்றே மற்ற செவ்வியல் நூல்களைச் செம்பதிப்புகளாகக் கொணரும் பணியில் சுவடியியல் புலம் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.

இணையவழிச் செவ்வியல் சுவடித் தேடல்

(Online Palmleaf Manuscripts Search Engine)

செவ்வியல் நூல்களின் முதல் அச்சுப் பதிப்புகள் - மின் நூல்கள்

(E Books of First Printed Editions of Classical Tamil Texts)

தமிழ் அறுபதாண்டுச் சுழற்சி அட்டவணை

கருத்துக்கள் - பதிவு